தேநீர் பருகுவீர்! உடல் எடையைக் குறைப்பீர்!

தேநீர் பருகுவது நன்மையா, தீமையா' என்ற தலைப்பில் பட்டிமன்றம் வைக்காதது ஒன்று மட்டுமே குறை.

உலக அளவில் தேநீர் குறித்து அவ்வப்போது பல்வேறு மருத்துவ ஆய்வுகள் வெளியிடப்படுவதும், புதுப்புது முடிவுகளை அறிவிப்பதும் வழக்கமாகிவிட்டது.

ஆயினும், சிரத்தையுடன் மேற்கொள்ளப்பட்ட நம்பகத்தன்மை கொண்ட மருத்துவ ஆய்வுகளை நாம் உதாசீனப்படுத்திவிடக்கூடாது.

அண்மையில் (2007-ம் ஆண்டு மத்தியில்) சீன மருத்துவ விஞ்ஞானிகள் ஒர் ஆய்வை மேற்கொண்டனர். அந்த ஆய்வின் முடிவில், 'தேநீர் பருகுவதால் உடல் எடை குறையும்' என்று தெரியவந்துள்ளது.

இந்த ஆய்வை சீனாவின் நான்ஜிங்கில் உள்ள குழந்தைகள் மருத்துவ அறிவியல் மையம், 5 ஆண்டுகளாக மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும், அதிகமாக சாப்பிடும் நபர்களுக்கு மட்டுமின்றி, பரம்பரை காரணமாக பருமனாக இருப்பவர்களும் தேநீர் பருகுவதால் உடல் இளைக்கலாம் என்கிறது அந்த ஆய்வு.

அதேநேரத்தில், அதிக அளவு தேநீர் பருகக் கூடாது என்பதும், 'டஸ்ட் டீ' மற்றும் 'சூப்பர் டஸ்ட் டீ' போன்றவற்றுக்கு இந்த ஆய்வு பொருந்த வாய்ப்பில்லை என்பதும் கவனத்துக்கு உரியது.